(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் என்பவற்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படத்தக்க பாதிப்புக்களைக் குறைப்பதற்கான 1.06 பில்லியன் ரூபா பெறுமதியான செயற்திட்டம் ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த அறிமுக நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் நாட்டின் செழிப்பு என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்வருடம் ஓர் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும் இன்னமும் நாட்டில் காணப்படும் வறுமையை ஒழிப்பது தொடர்பில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் முன்னரைப் போன்றே அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது என்று அந்நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நாயகம் கான்க் யொன் ஹுவா தெரிவித்தார்.

எத்தகைய காலநிலை மாற்றங்களுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வதிவிட நிர்மாணம் மற்றும் தேவையான அபிவிருத்தி என்பவற்றை எமது முதலீட்டின் ஊடாக மேற்கொள்ள முடியும். 

அதன்மூலம் வறுமைக்கோட்டில் உள்ள சமூகத்தின் வாழ்வில் நிலைபேறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் பிரெண்டா பார்டன் கூறியதாவது:

இவ்வருடத்தில் வரட்சியினாலும், கடந்த மூன்று வருடகாலத்தில் சூறாவளியினாலும் ஏற்பட்ட தாக்கங்கள் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்புடைய வகையில் வறிய விவசாயக் குடும்பங்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்துகின்றன. 

இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவம் தொடர்பிலும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் தொடர்ச்சியானமுதலீடுகள் குறித்தும் திருப்தி அடைகின்றோம்.

இந்நிதியுதவியின் மூலம் வீடுகளுக்கான நீர்விநியோக வசதிகள், இளையோரை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கு அவசியமான அபிவிருத்தி நுட்பங்கள் உள்ளிட்டவற்றை முன்னெடுப்பத்றகு எதிர்பார்க்கப்படுகின்றது. மொணராகலை, மாத்தளை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் சமார் 21 ஆயிரத்து 600 பேர் இத்திட்டத்தின் ஊடாகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.