(எம்.மனோசித்ரா)

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திர கட்சி கைசாத்திடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயரிய பதவியொன்று வழங்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணி அமைத்து செயற்பட உள்ளது. 

தேசிய அரசாங்கத்தில் புரிந்துணர்வுடன் ஒப்பந்த அடிப்படையில் சுதந்திர கட்சி அமைச்சு பதவிகளை பொறுப்பேற்று அங்கம் வகித்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் பின்னர் அரசாங்கத்திலிருந்து முழுமையாக விலகியது. 

இதன் பின்னர் மாற்று அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீவிரமாக செயற்பட்டு வந்த நிலையில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது. 

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை மையப்படுத்தி பரந்தளவிலான கூட்டணியை சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ்  அமைப்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் வேட்பாளர்களை சுதந்திர கட்சியில் தெரிவு செய்தல் போன்ற நிபந்தனைகளுடன் ஏனைய தரப்புக்களை நாடியது. 

இந்நிலையில்பொதுஜன பெரமுனவுடனான கலந்துரையாடல்கள் எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நீடித்தது. இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவும் கூட்டணிக்கான இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் கூட்டணிக்கான ஒப்பந்த்தில் கைசாத்திடப்படவுள்ளது.