சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகவிருக்கும் ‘800’ என்ற திரைப்படத்திலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விலகுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எம் மண்ணைச் சார்ந்த சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் உலகில் 800க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவருமான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘800’ என்ற பெயரில் அறிமுக இயக்குனர் சிறிபதி ரங்கசாமி என்பவர் புதிய திரைப்படத்தை ஒன்றை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. 

இதில் முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவிக்கை யில்,‘ முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது பெருமையாக உள்ளது” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து முரளிதரன் வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல தமிழ் இன உணர்வாளர்கள் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங் களிலும் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பற்றிய விஜய் சேதுபதியிடம் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அங்குள்ள ஈழத்தமிழர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இது குறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து 800 என்ற படத்தில் இருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விலகல் என்ற செய்தி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.