(எம்.நேச­மணி)

15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட  வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு  மாத்­திரம் என மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக  நகர தொடர்­மாடி அபி­வி­ருத்­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் கே.சீலன் தெரி­வித்தார்.

அமைச்சர் மனோ­க­ணேசன் ஊடாக நிதி­ய­மைச்­சுடன் மேற்­கொள்­ளப்­பட்ட பல­கட்ட பேச்­சு­வார்த்­தையின் பின்­னரே இந்த வரி­ தி­ருத்­தத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டது எனவும் அவர் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு 15 வீத வற்­வ­ரியை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச்  31 ஆம் திக­தி­வரை அந்த வரியை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைத்­தது. 

இந்த 15 வீத வற் வரி­யினால் நாம் எதிர்­நோக்­கிய சவால்­க­ளையும் அதே­போன்று சாதா­ரண வாடிக்­கை­யா­ளர்கள் முகம்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­க­ளையும் நிதி­ய­மைச்­சரின் கவ­னத்­துக்கு  அமைச்சர் மனோ கணேசன் மூலம் கொண்டு சென்றோம். 

அது தொடர்பில் பல­கட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளையும் மேற்­கொண்டோம். அதன் பின்­னரே இந்த வற்­வ­ரியில் திருத்­தத்தை மேற்­கொள்ள நிதி அமைச்சு இணக்கம் தெரி­வித்­தது.

அத­ன­டிப்­ப­டையில் கடந்த ஜூலை 30ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி  ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­தி­ரமே  15வீத வற்­வரி அற­வி­டப்­படும் என குறிப்­பி­டப்­பட்­டது. 

அதா­வது ஒரு தொடர் மாடி குடி­யி­ருப்பு தொகு­தி­யி­லுள்ள சகல வீடு­களும் ரூபா 25 மில்­லி­ய­னுக்கு குறை­வாக இருக்க வேண்டும். அவ்­வாறு இருக்கும் பட்­சத்­தி­லேயே 15வீத வற்­வரி அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. மாறாக அந்த  குடியிருப்பு தொகுதியில்  ஒரு வீடாயினும்  ரூபா 25 மில்லியனுக்கு அதிகம் என்றால் அந்த குடியிருப்பு தொகுதியிலுள்ள சகல வீடுகளுக்கும்  15வீத வற்வரி செலுத்த வேண்டும் என்றார்.