வவுனியா - பாவற்குளத்தில் மணல் அகழ்வின் போது மணல் மேடு இடிந்து விழுந்ததில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, பாவற்குளம் பகுதியில் சிலர் ஆற்றில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த போது மணல் மேடு இடிந்து வீழ்ந்ததில் இருவர் அகப்பட்டுள்ளனர். இதனை அங்கு நின்றவர்கள் அவதானித்த நிலையில் உடனடியாக மண்ணை வாரி எடுத்து, குறித்த இருவரையும் மீட்டனர் .

 

இந்நிலையில், இருவரும் மண்ணில் அகப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தமையால்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்கப்பட்டனர். குறித்த இருவரில் ஒருவரின் முள்ளந்தண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மற்றையவர் குணமடைந்து வருவதாகவும் தெரியவருகிறது. குறித்த விபத்தின் போது பாவற்குளம் படிவம் இரண்டைச் சேர்ந்த  45 வயதான மீரா முகைதீன் மாக்கின்  மற்றும்  சூடுவெந்தபுலவைச் சேர்ந்த 28 வயதான ஏ.ஜே.முஸித் ஆகிய  நபர்களே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.