(ஆர்.விதுஷா)

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையரின்    எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையிலும் , பாதுகாப்பு , காப்புறுதி,நலன்கள் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கும்  'ரன் பியாபத்' வேலைத்திட்டத்தின்  அங்குரார்பண  நிகழ்வு  இன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகத்தில் இடம்  பெற்றது.

 

இந்த  திட்டத்தின் ஊடாக தொழிற்பயிற்சி ,வழிகாட்டல்  மற்றும்  சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதுடன்,  வைத்தியவசதிகள்  மற்றும்  எதிர்பாராத சம்பவங்கள் இடம் பொழுது கைகொடுக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காப்புறுதி  சேவையும் நடைமுறைப்படுத்தப்படும். 

அத்துடன், விசேட கடன் வசதிகள்,தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் சிறந்த அனுகூலங்களுடனான உள்நாட்டு வெளிநாட்டுப்பாதுகாப்பு  , வெளிநாட்டில்  தொழில் புரிவோரின் பிள்ளைகளுக்கான பாடசாக்கல்விக்கு ஊக்கமளித்தல்  மற்றும்  புலமைப்பரிசில்  வழங்குதல்  என்பனவும் இலவசமாக  வழங்கப்படும்.   

தொலைத்தொடர்புகள்  ,வெளிநாட்டு தொழில் வாய்ப்பு  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹரீன்  பெர்னெண்டோ வின்  ஆலோசனைக்கு  அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய  திட்டத்தின்  அங்குரார்பண  நிகழ்வில்   பிரதம அதிதியாக  நிதியமைச்சர்  மங்கள  சமரவீர, பாராளுமன்ற  உறுப்பினர்கள் எம்.எஸ் .தௌபிக் , ஹர்ஷண ராஜகருண ,ஹெக்டர் அப்புஹாமி உள்ளிட்ட  முக்கிய  பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.