இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை இடைநிறுத்தவும், இராஜதந்திர உறவுகளை குறைக்கவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரையும் அந்நாடு வெளியேற்ற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்று பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அந்நாட்டின் உள்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். அந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான்” என்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இம்ரான் கான், “இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். இறுதி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாங்கள் போராடுவோம்” என்று கூறியிருந்தார்.

அதையொட்டியே இந்த முடிவினை பாகிஸ்தான் எடுத்துள்ளது.