(நா.தினுஷா) 

சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் இலங்கை சார்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள கைச்சாத்திட்டுள்ளார்.  

இந்த சாசனத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு சிங்கப்பூர் சங்ரில்லா ஹோட்டலில இன்று இடம்பெற்றதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

இலங்கை சர்வதேச மட்டத்தில் இணக்கத்தீர்வு தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறைகளை  கொண்ட நாடாக அமைகிறது. இந்த உடன்படிக்கையினூடாக இணக்கத்தீர்வுகளின் போது அதன் வலுவான தன்மையை  சர்வதேசம்  ஏற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள நம்பகமற்றத் தன்மையை இல்லாது செய்வதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின்  வர்த்தக சட்டம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் சிங்கப்பூர் நீதி அமைச்சு  ஆகியன இணைந்தே இந்த மாநாட்டை  ஏற்பாடு செய்திருந்தது. அத்தோடு  நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இந்த மாநாடு இன்றுடன் நிறைவுக்கு வந்திருந்தது. 

 சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சின் லூங், ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நடவடிக்கைகள் தொடர்பான  உதவி செயலாளர் ஸ்டெபன் மதியாஸ், சிங்கப்பூர் நீதி அமைச்சர் கே. சன்முகம் ஆகியோரும் 67 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.