திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில் 40 சுகாதார தொழிலாளர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று 07ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

நகராட்சி மன்றத்தின் தலைவர் நா. இராஜநாயகம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் உபதலைவர் சே.சிறிஸ்கந்தராஜா மற்றும்  செயலாளர் ஜெயவிஸ்னு உறுப்பினர்கள் வேலை அத்தியட்சகர் மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பதிலீட்டுத் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டவர்களில் 12 பெண்களும் 28 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். 

தலைவர் உரையாற்றும் போது, அழகிய சுற்றுலா நகரமாகிய திருகோணமலை நகரத்தை அழகாகவும் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பேண வேண்டியது நம் எல்லோருடைய கடமை அதனடிப்படையில் சபையின் சகல உறுப்பினர்களின் முயற்சியால் உள்ளூராட்சி திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதிகளை பெற்று இந்த நியமனம் வழங்கப்படுகிறது.

இதனைப் பெறுகின்ற தொழிலாளர்கள் உயரதிகாரிகளின் பணிப்புக்கு அமைய தொழிலை சிறப்பாக மேற்கொண்டு நன்மையடையுமாறு தமது உரையில் தலைவர் நா. இராஜநாயகம் தெரிவித்தார்.