‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும்’ நிலைபோல் எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலைமை உருவாகி வருகின்றது. கொழும்பில் அதிகளவில் குப்பை சேர்வதற்கும் முஸ்லிம்கள் தான் காரணம் சொல்லும் நிலையும் அவற்றை முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில்தான் கொட்ட வேண்டும் எனக் கருத்துரைக்கும் நிலையும் உருவாகி வருகின்றது. 

Image result for நஸீர் அஹமட்

இத்தகைய நிலை தொடர்ந்து நீடிப்பது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலைத் தோற்றிவைக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அரசியல்வாதிகள் செயற்படவேண்டும். என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் .தெரிவித்துள்ளார் 

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சட்டங்களை அவர் அவர் தத்தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கையில் எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. மதவாதம் இதற்கான வழிகளை திறந்து விட்டுள்ளது. பர்தா அணிந்து மாணவிகள் பரீட்சையில் தோற்றக்கூடாது எனச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலையும் உருவாகி வருகின்றது.

நாட்டில் சமகாலத்தில் நடைபெற்ற தனிப்பட்ட சம்பவங்கள் கூட முஸ்லிம்களைச் சம்பந்தப்படுத்தும் இலக்குகளைக் கொண்டவையாக வெளிப்படுத்தப்படும் நிலைமைகளே காணப்படுகின்றன.

இத்தகைய நிலை தொடர்ந்து, பரந்து, விரிந்து செல்லுமாயின் இனங்களுக்கிடையிலான ஐக்கியம், நல்லிணக்கம் புரிந்துணர்வு என்பன கேள்விக்குரியதாக மாறும் என்பதே யதார்த்தம்.

அரசியல்சார் அனைத்துத் தரப்பினரும் தற்போது தேர்தல்களை நோக்கமாகக் கொண்டே  தத்தமது நடவடிக்கைகளை வடிவமைத்து வருகின்றனர். இதற்கான வியூகங்களை வகுத்தும் அவர்கள் செயற்பட்டும் வருகின்றனர். இது தொடர்பான விடயங்களில் அவர்களது பிரதான இலக்காக இருப்பது சிறுபான்மை மக்களின் ஆதரவாகும். இதனைப் பெற வேண்டுமாயின் எத்தகைய புறநிலைகளைத் தோற்றிவிக்க வேண்டும்  என்பதை இலக்காகக் கொண்டு சிலர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்தக் காய்நகர்த்தல்கள் கூட சிலவேளை சிறுபான்மை சமூகங்களைப் பிரித்தாளும் நிலைக்குச் செல்லக்கூடிய அபாயம் உள்ளது என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். எனவே, தமிழ் - முஸ்லிம் மக்கள் சமகால கள நிலவரங்களை அறிந்து தாமும் வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்" - என்றுள்ளது.