(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக அவுஸ்திரேலியரான டொம் மூடி, தென் ஆபிரிக்கர்களான மிக்கி ஆர்த்தர் மற்றும் ரசல் டொமின்கோ ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மூவரில், ரசல் டொமின்கோ, டொம் மூடி இருவர் குறித்து அதிக அவதானம் எடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரசல் டொமின்கோ தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக கடமையாற்றியுள்ளதுடன், தென் ஆபிரிக்கா ஏ கிரிக்கெட் அணிக்கும் தலைமை பயிற்றுநராக கடமைாயற்றியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டொம் மூடி, 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக செயற்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநரான மிக்கி ஆர்த்தரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும், தொடர்ந்தும் அப்பதவியில் செயற்படுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் எழுத்து மூல ஆவணமொன்றை சமர்ப்பித்துள்ளதால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநருக்காக வருவதற்கான வாய்ப்பு குறைந்தளவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக செயற்பட்டு வரும் சந்திக்க ஹத்துருசிங்க தொடர்ந்து பதவி வகிப்பாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது என்பது பலரும் அறிந்த விடயமாகும். இந்நிலையிலேயே, இலங்கை அணியின் தலைமை பயிற்றுநர் பதவிக்கு டொம் மூடி, ரசல் டொமிங்கோ, மிக்கி ஆர்த்தர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.