பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழாமை முற்றாக கலைப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரும், பந்து வீச்சுப் பயிற்சியாளராக அசார் மாஹ்மூத்தும், துடுப்பாட்ட பயிற்சியாளராக கிரேண்ட் பிளேவர் ஆகியோரின் செயற்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தான் அணி நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை தவற விட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் பயிற்சியார்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. 

இந் நிலையிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் குழமை முற்றாக கலைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

மிக்கி ஆர்தர்  கடந்த 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்து வந்த நிலையில், அவரது பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஆர்தரின் தலைமையின் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியதுடன், சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தமை விசேட அம்சமாகும்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிக்கி ஆர்தர் விண்ணப்பத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.