இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 

அவர் இறுதியாக நேற்றுப் பகிர்ந்திருந்த டுவிட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். 

1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. சட்டத்தரணியான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டில்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கின்றார். 

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராகப் பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 

1996ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது மக்களவைக்கு சுஷ்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒளிப்பரப்புத்துறை, குடும்ப நலம், வெளியுறவு எனப் பல்வேறு துறைகளில் அவர் அமைச்சராகப் பணியாற்றி இருக்கின்றார். 

டுவிட்டரில் தொடர்ந்து இயங்கிய அவர், டுவீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கின்றார்.

"இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது" என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.