ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வவுனியா போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை மூலம் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியின் விசேட நடவடிக்கையின் கீழ் நாடாளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய கடந்த மாதம்  5 ஆம் திகதி முதல் போக்குவரத்து பொலிசாரால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் வவுனியாவில் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோனின் வழிகாட்டலில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.சம்மத்பெரேரான் கீழ் பொலிஸ் பரிசோதகர் அசோக்க பியசாந் மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் திசநாயக்கவின் தலைமையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான 27 நாட்கள் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சாரதிகளை நீதிமன்றில் முற்படுத்தி தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், அவர்களது சாரதி அனுமதி பத்திரங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சனை, வாகன ஆவணங்கள் இல்லாமை, வாகன இருக்கை பட்டி அணியாமை, தலைகவசம் அணியாமை, வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை, விபத்துக்களை ஏற்படுத்தியமை என்பன தொடர்பில் 2584 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து நீதிமன்றம் மற்றும் தபால் நிலையம் ஊடாக குற்றப் பணங்களும் அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.