(செ.தேன்மொழி)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷேகு ஷியாப்தின் மொஹமட் ஷாபியினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான பரிசீலனைகளை உயர் நீதிமன்றம் எதிர்வரும் செப்டபர் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது.

தன்னை இரகசிய பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி  அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிரடி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டதரணி பைஸர் முஸ்தப்பா இந்த மனுவை திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிப்பதற்காக ஒரு திகதியை மூவரடங்கிய நீதியரசர்களிடம் கோரினார். 

இதனை தொடர்ந்து மனுவில் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கிய நீதியரசர் குழாம் ,  மனு மீதான பரிசீலனைகளை  எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.