ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவருவது தொடர்பில் இரு நாடுகளினதும் அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி அஹமட் எல்.எஸ்.கான் 'கலீஜ் டைம்ஸ்' செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

'நாங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை சிறைக்கைதிகளை நாட்டிற்குக் கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இலங்கையைச் சேர்ந்த சுமார் 600 கைதிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைகளில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களாவர். அவர்களின் எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கை சிறைகளில் அனுபவிப்பதற்கு அனுமதிப்பதன் ஊடாக அவர்கள் தமது குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று கான் நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அங்குள்ள சிறைகளில் காணப்படும் வசதிகளின் காரணமாக சிறைக்கைதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் காட்டுவார்களா என்று அவரிடம் வினவிய போது, 'இலங்கை சிறைச்சாலைகளைப் பொறுத்தவரையில் சர்வதேச தரம் பேணப்படுகின்றது. எனவே நாடு திரும்புவதற்கான ஒரு தெரிவை அவர்களிடம் முன்வைக்கும் போது, நிச்சயம் அதனை அவர்கள் ஏற்பார்கள்' என பதிலளித்தார். அத்தோடு அவர்கள் அமைதியான வாழ்க்கை ஒன்றை நோக்கி நகர்வார்களேயன்றி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இவ்வாண்டின் முன்னரைப் பகுதியில் பெருந்தொகையான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்த போதிலும், தாக்குதல்களின் பின்னர் வீழ்ச்சிகண்ட சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் மீட்சியடைந்து வருகின்றது என்றும் கான் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய அரபு இராச்சியம் கடினமானதும், சவாலானதுமான பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு உதவியிருக்கிறது. 2004 இல் சுனாமி ஏற்பட்ட போதும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போதும் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் முக்கியமானவை. அதேபோன்று இலங்கை தொடர்பில் விதித்திருந்த பயண எச்சரிக்கையையும் ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கிக் கொண்டிருக்கிறது என்றார்.