பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் ஒருவர் தனது மகள் போன்று வேடமணிந்து சிறையிலிருந்து தப்பிச்செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை சிறைச்சாலை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

குளவினோ டா சில்வா என்ற 42 வயது நபரே பிரேசில் தலைநகரில் உள்ள அதிபாதுகாப்புடன் காணப்படும் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தனது மகள்போன்று வேடமிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார் ஆனால் அவரிடம் காணப்பட்ட பதட்டம் மற்றும் முரணான உடல் அசைவுகள் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் அவரை கண்டுபிடித்துவிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த யுவதியின் உயரம் குறித்து எங்களிற்கு சந்தேகமேற்பட்டது அதனை தொடர்ந்து அவரை பக்கத்து அறைக்குள் அழைத்து சென்று சோதனையிட்டோம் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது முகத்தை தனது மகளின் முகம் போல மாற்ற முயன்றாலும் அவரது முகத்தில் பெண்ணின் தோற்றம் காணப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது தோற்றத்தில் எங்களிற்கு சந்தேகம் ஏற்பட்டது, மேலும் அவர் சிறைக்கைதிகளை பார்த்துவிட்டு செல்லும் பெண்களின் நடுவில் காணப்பட்டார் அவர்கள் அவரை மறைப்பது போல எங்களிற்கு தோன்றியது எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் சந்கேத்தில் அந்த யுவதியின் போலிதலைமுடியை அகற்றுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவில் யுவதிபோல தோற்றமளிப்பவர் தனது உடைகளை அகற்ற மறுப்பதையும் அதிகாரிகள் அவரை அனைத்து உடைகளையும் அகற்றுமாறும் எச்சரிப்பதையும் காணமுடிகின்றது.

இறுதியாக அவரது முகமுடி அகற்றப்படும் போது அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்பது தெளிவாகின்றது.

இதேவேளை சிறைக்கைதிகளை  பார்ப்பதற்கு வெளியாட்களிற்கு வழங்கப்படும் அனுமதியை பயன்படுத்தி தனது மகளின் தோற்றத்தில் தப்பிச்செல்ல முயன்றதை குளவினோ டா சில்வா ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவரிற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் மகளையும் கர்ப்பிணிப்பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட கர்ப்பிணிப்பெண்ணே தனது ஆடைகளிற்குள் பொருட்களை மறைத்து கொண்டு சென்றார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.