அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரம் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மகாலெட்சுமி அம்மன் கோயில். இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இதன்போது, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டின் திருவிழா கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது.  இதையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து, கோயில் பூசாரி பெரியசாமி ஆணி காலணி அணிந்து பூஜைகளை நடத்தினார். தொடந்து அம்மன் அனுமதிக்கு பிறகு சுவாமி அரிவாளுடன் பூசாரி முதலில் சக்தி தேங்காயை உடைத்தார். 

அதன் பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வரிசையில்  அமர்ந்தனர். இதையடுத்து கோயில் பூசாரிகள் பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் சிலர் மொட்டை தலையுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.