(செ.தேன்மொழி)

தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்தை நீக்குமாறு குறிப்பிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.

கொழும்பில் வீதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் இன்று ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்தை நீக்குமாறு குறிப்பிட்டே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்காரர்கள் அரசாங்கத்தினால் கொண்டுவர உத்தேசித்திருக்கும் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நெருங்குவதை தடுப்பதற்காக பொலிஸார் லோட்டஸ் சந்தியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது மாணவர்களின் வருகையை தடுக்கும் வகையில் பொலிஸார் தடுப்பு வேலிகளையும் போட்டிருந்தனர். 

பொலிஸாரின் பாதுகாப்பை மீறி மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்ல முற்பட்டதினால், பொலிஸார் மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் களைந்து சென்றனர். மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட பாதையில் பாரிய வாகன நெறிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.