குளங்கள் கிராமங்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளில் காலநிலை மாற்றத்தினை தாக்குபிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அபிவிருத்தி செய்யபட்டு வரும் குளங்களை வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் இன்று (05) பார்வையிட்டார்.

கடந்தவருடம் குறித்த திட்டத்தின் கீழ் 14 குளங்கள் வவுனியாவில் புனரமைப்பு செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளபட்டுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் இன்றையதினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார். 

காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஆளுனர் அதன் பின்னர் மதகுவைத்த குளத்திற்கு சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டிருந்ததுடன் ஏனைய சில குளங்களையும் சென்று பார்வையிட்டிருந்தார். 

காலநிலை வேறுபாடுகள் மற்றும் தீவிர மாற்றங்களுக்கு தாக்கு பிடித்தலை நோக்காககொண்டு உலர் வலயங்களில் வாழும் சிறு விவசாயிகளை பலப்படுத்தும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் ஜக்கியநாடுகள் அபிவிருத்தி  நிகழ்சி திட்டத்தின் நிதி உதவியுடன் குறித்த அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அரசஅதிபர் ஐ.எம்.கனீபா, கமநல உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கமக்காரர் அமைப்புகளை சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.