அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடற்கரையில் குன்றின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் பலியான சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த அன்னே கிளாவ் (35) என்ற பெண் மார்பக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் அந்த நோயில் இருந்து அவர் விடுபட்டார்.

இதனை கொண்டாடும் விதமாக அவர் தனது குடும்பத்தினருடன் சந்தியாகோ நகரில் உள்ள பிரபல கிராண்ட் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர்கள் கரையோரத்தில் குன்று கீழ் குடைகளுடன் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து, கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போதும் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த குன்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் அன்னே கிளாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் அன்னே கிளாவ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மேலும் அவரது தாய் மற்றும் உறவுக்கார பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.