(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவரான மொஹமட் நௌஷாட் உமர் என்ற சந்தேக நபருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர். பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் நுவரெலிய பயிற்சி முகாம்களில் பங்குப்பற்றி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பயிற்சிகளை பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

இதே வேளை கைது செய்யப்பட்டுள்ள மற்றைய சந்தேக நபரான மொஹமட் ஸ்மைல் சல்மன் என்பவர் ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பில் ஷாதிக் அப்துல் ஹக் என்ற நபரிடம் பயங்கரவாத செயல்களுக்கான பயிற்சிகளை பெற்றுள்ளார். மேலும் சந்தேக நபர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரபு கற்கை பிரிவின் மாணவன் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் ஷாதிக் அப்துல் ஹக் என்பவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்று மாணவர்களுக்கு சந்தேக நபரான மொஹமட் ஸ்மைல் சல்மன் போதனை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய சந்தேக நபரான மொஹமட் நௌஷாட் உமர் என்பவர் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவராக செயற்பட்டுள்ளார்,  ஷாதிக் அப்துல் ஹக்கின் ஆலோசணைகளின் பிரகாரம் பயங்கரவாதி சஹ்ரானின் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆயுதங்களை கையாளுதல், வெடிபொருட்கள் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் கொள்கையை பரப்புதல் போன்ற பயிற்சிகளை சஹ்ரானிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  

ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் பல உறுப்பினர்களை நுவரெலியா பயிற்சி முகாமிற்கும் அனுப்பி வைத்துள்ளமையும் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மொஹமட் நௌஷாத் உமர் என்ற சந்தேக நபரும் , அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மொஹமட் ஸ்மயில் மொஹமட் சலமன்  ஆகிய இருவரும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.