ஆகஸ்ட் மாதம் பிறந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலை விட தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை அறியும் பரபரப்பில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதேவேளை,  ஜனாதிபதி வேட்பாளர்  பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களை அதே கட்சியை சேர்ந்தவர்களே விமர்சித்து வரும் போக்கும் அதிகரித்துள்ளது. 

இதில் வேட்பாளர்களின் கல்வித்தகுதி பற்றியும்  அண்மையில் காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாஸவின் கல்வித்தகுதி  பற்றி அக்கட்சியின் ரவி கருணாநாயக்க விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த கல்வித்தகைமை கொண்டவர்களையே வேட்பாளராக நியமிக்கவுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ இலங்கையில் சாதாரண தரம் கூட பூர்த்தி செய்யாத ஒருவராக இருக்கின்றார் என்றும் கூறியிருந்த அவர், முடியுமானால் அத்தகுதியை அவர் நிரூபிக்கட்டும் என சவால் விடுத்திருந்தார். இதேவேளை, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ‘ ஐக்கிய தேசியக் கட்சியானது சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த   ஒரு பட்டதாரியை தனது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இதற்கு பதிலளித்திருந்த  சஜித் பிரேமதாஸவோ,  தான் இலங்கையின் சாதாரண தரத்திற்கு ஈடான கல்வியை லண்டனில் கற்றதாகத் தெரிவித்திருந்தார். தனது தந்தை பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் லண்டனின் பிரபல பொருளியல் கல்லூரியில் கல்வி கற்றதாக கூறும் சஜித், அங்கு தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கின்றாரா  என்பதில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. 

இருப்பினும் சஜித் அங்கு கல்வியைத்தொடர்ந்திருந்தாலும் சுகவீனம் காரணமாக பரீட்சைகளுக்கு தோற்ற முடியாது போனால் மாணவர்களுக்கு வழங்கப்படும்  சான்றிதழே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இங்கு எழுந்திருக்கும் கேள்வியானது சரியான கல்வித்தகுதியை கொண்டிருந்தும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ விளங்கியவர்கள்  அந்நாடுகளை  பொருளாதார சரிவிலிருந்தும் மீட்டெடுத்து  சிறந்த நிர்வாகத் திறனோடு பயணித்தார்களா என்பதேயாகும்.

இதற்கு சிறந்த உதாரணங்களாக ஆசியாவில் இந்தியாவையும் சீனாவையும் சிங்கப்பூரையும்  எடுத்துக்கொள்ளலாம். மன்மோகன் சிங் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். 

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் 1991 இல் இந்திய நிதி அமைச்சராகவும் விளங்கியவர். அவரை பிரதமராக்கியது காங்கிரஸ்.  10 வருடங்கள்  பிரதமராக விளங்கிய அவரால் அக்காலத்தில் இந்திய அரசியல் போக்கை ஸ்திரமாக்க முடியாது போனது. 

அவரது திறந்த பொருளாதார சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமுல்படுத்த முடியவில்லை.  இதற்கு பல அரசியல் காரணங்களும் பின்னணியில் இருக்கின்றன. 

சீனாவும் சிங்கப்பூரும்
ஆனால், மறுபக்கம் சீனாவையும் சிங்கப்பூரையும் எடுத்துக்கொண்டால் இந்நாடுகளின் தலைமைத்துவ பதவிகளில் உள்ளவர்களின் கல்வி மற்றும் இதர தகுதிகள் உச்ச அளவில் உள்ளன. ஆசிய நாடுகளில் சிறந்த கல்வித்தகுதி கொண்ட தலைமைத்துவங்களை கொண்ட மிகத் திறமையாக நிர்வகிக்கப்படும்  பிரதான இரு நாடுகளாக இவையிரண்டுமே விளங்குகின்றன. 

 சீன  கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வகுப்பு குழுவானது உலகின் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு அரசியல் நிறுவனமாக விளங்குகிறது. தற்போதைய ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு  பொறியியல் மற்றும் பொருளாதாரத்தில் திறன் கொண்டவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இவர்கள் மூலமே சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது மாகாணங்களில் அதற்கு பொறுப்பானவர்களிடம் சட்டம்,ஒழுங்கு,பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையில் நிர்வாகத்தை பிரித்து கொடுத்துள்ளது.  சிங்கபூரிலும் இதே நிலைமையே.

இந்த இரண்டு நாடுகளின் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பதே தகுதியான நியமனங்களே.  மட்டுமன்றி, தமது நாட்டை வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற மக்கள் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களையும் கூறலாம்.

இதற்கு நேர் எதிராக இலங்கையிலும் இடம்பெற்ற சம்பவத்தை கூறலாம். அமரர்  ரணசிங்க பிரேமதாச வறியவர்களுக்கு உதவும் செயற்பாடுகளில் பாடசாலை காலத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டவர் .  இதன் காரணமாக தனது உயர்கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர் இந்நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் உயர்ந்தார். இவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தை பொற்காலம் என இப்போதும் கூறுவர். பொருளாதாரத்தில் நாட்டை குறிப்பிடத்தக்க இலக்குகளோடு முன்னேற்றிய இவர் வறுமைக் கோட்டின் கீழ் இருந்தவர்களை எழுச்சி பெறச்செய்தார். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் சிறந்து விளங்கிய நிபுணர்களை  தனதருகில் அமர்த்தி திறம்பட நிர்வாகத்தை முன்னெடுத்தார்.  

இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய ஒருவர் அதீத கல்வித் தகுதியுடையவராக   இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இது உணர்த்தியது.   ஆனால், தற்போது நிலைமைகள் வேறு . தமக்கு வேண்டியவர்களை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தெரிவு செய்ய வேண்டியதொரு சூழ்நிலையில் இலங்கையின் தேசியக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளதால் இங்கு கல்வி மற்றும் ஏனைய தகுதிகள் பற்றி பேசப்படுகின்றன. 

 தேசப்பற்று
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தேசப்பற்று பற்றியும் கதைக்கப்படுகின்றது. கல்வித்தகுதிகள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் எவ்வாறு கருத்துக்களை முன் வைக்கின்றனரோ அதே போன்று கோத்தாபய  ராஜபக் ஷவை வைத்து தேசப்பற்று பேசப்படுகின்றது. மஹிந்தவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தாபய ராஜபக் ஷ இலங்கை இராணுவத்தில் லெப். கேர்ணல் தரத்தில் பணியாற்றியவர்.

எனினும் 1991 ஆம் ஆண்டு இவர் இராணுவத்திலிருந்து விலகி பின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்று அதன் மூலம் அமெரிக்கா சென்றவர். இந்த விவகாரத்தில் மஹிந்த அணியினரோடு இருக்கும் இடதுசாரி கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது போன்றே தெரிகிறது.

அதாவது நாட்டுக்காக இராணுவத்தில் பணியாற்றிய கோத்தா இடை நடுவில் அதை விட்டுச்சென்றது தான் நாட்டுப்பற்றா ? இப்போது அவர் எங்ஙனம் நாட்டு மக்களின் மீது அக்கறை உள்ளவர் போன்று வேட்பாளர் அவதாரம் எடுக்கலாம் என்பதே எதிரணியினரின் கேள்வியாகவும் பிரசாரமாகவும் உள்ளது. 

இதேவேளை கோத்தாபய ராஜபக்சவும் தன்னை ஒரு இராணுவ அதிகாரி என்று காட்டிக்கொள்ளாதவராகவும் மக்கள் சேவகனாகவும் நிர்வாக திறன் மிக்கதோர் சிவில் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவுமே மக்கள் மத்தியில் கோலோச்ச விரும்புகிறார். 

இராணுவ வீரராக யுத்தத்தில் சிறிது காலமே பங்குபற்றியிருந்தாலும் பாதுகாப்புச் செயலாளராக யுத்தத்தை முடித்து வைத்த ஒரு வெற்றி வீரராக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றைப்பொறுத்தவரை இதுவரை காலமும் ஏற்படாத சிக்கல்களும் ,முரண்களும், எதிர்பார்ப்புகளும் இலங்கையில் ஏற்பட்டுள்ளன. எதை இலக்காக வைத்து மக்களை கவரலாம் என்றே அனைத்து தேசியக் கட்சிகளும் சிந்திக்கின்றன. 

ஆனால் எதிர்கால இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் தேவையும் இக்கட்சிகளுக்கு இல்லை என்பதை இலகுவாகக் கூறி விடலாம். இன்றைய பிரச்சினையை தீர்ப்பதே இவர்களின் அவசரத்தேவையாக உள்ளது. ஏனைய விடயங்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியிலேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன. 

சர்வதேசம் அறிந்த  தலைவர்
ஜனாதிபதி வேட்பாளர் எப்படியானவராக இருக்க வேண்டும் என கட்சிகளுக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் ஒரு சாரார் சர்வதேசம் அறிந்த ஆளுமைமிக்கவரே வேட்பாளராக வேண்டும் என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றனர். இது பிரதான கட்சிகளின் தற்போதைய தலைவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் ,சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொது ஜன முன்னணியின்  மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேசம் அறிந்த தலைவர்களாக இருக்கின்றனர். இதில் மஹிந்தவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் அவர் கை காட்டும்  ஒருவருக்கு ஆதரவை வழங்குவதற்கு இந்த நாட்டின் பெரும்பான்மையினத்தவர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

இந்த வரிசையில் ரணில் ,மைத்திரி, மஹிந்த மூவரையும் வைத்து நோக்கினால் அதில் மஹிந்தவே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஏனென்றால்  போர் வெற்றி நாயகனாக இன்றும் மக்கள் மனதில் இருப்பவர் மஹிந்த மட்டுமே. 

இதற்குப்பிரதான காரணம் மஹிந்தவின் யுத்த சித்தாந்தமேயாகும். 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கு கிழக்கு பகுதிகளின் தமிழர் வாக்குகளை தடுத்து நிறுத்தியதன் மூலம் மஹிந்த ஆட்சிக்கு வர உதவினார். இதன் மூலம் சமாதான முயற்சிக்கு அப்பாற்பட்டு  ஆயுதப்போராட்டமே ஒரே வழி  என்ற செய்தியை இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் புலிகள் ஆழ உரைத்தனர்.  

அதே நேரம் யுத்தத்துக்கு யுத்தமே வழி என்ற நிலைப்பாட்டில் இருந்த மஹிந்தவை வரச்செய்தனர். அதன் பின்னர் நான்கே ஆண்டுகளில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த தனது யுத்த சித்தாந்தத்தை கொண்டே இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியானார்.  இந்த யுத்த சித்தாந்தம் 14 வருடங்களை கடந்தும் நாட்டின் பெரும்பான்மை மக்களின் மனதை விட்டு மறையாதிருக்கின்றது. இதை கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் உணர்த்தி நின்றன. 

அது தற்போதும் எதிரொலிக்கின்றது என்பதே உண்மை. அமெரிக்கா ,சீனா ,இந்தியா போன்ற நாடுகளிடம் அமைதியான வழியில் அவர்களுக்குகேற்றாற்போன்று இசைந்து கொடுக்கும்  ரணில் போன்ற தலைவரை விட ஒரு மாற்றுத்தலைமையையே தற்போது இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

சஜித் பிரேமதாசவோ  வறுமையை போக்கினால் போதும் என்ற வகையில் வீடமைப்புத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி மக்களை ஈர்க்கும் வகையில் செயற்படுகிறார். ஆனால் தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இது தீர்க்கதரிசனமானதல்ல. இங்கு வறுமையை விட தீவிரமான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. 

ஆனால் மஹிந்த அணியோ உள்நாட்டு யுத்தத்தை விட்டு தற்போது சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் ஊடுறுவியுள்ளமை பற்றி பேசுகிறது.  இந்த அனைத்துத்தரப்பினரும் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கீழ் நிலைக்குச் செல்ல காரணமான கடந்த கால ஊழல் சம்பவங்களைப்பற்றி வாய்திறக்கவேயில்லை.  அதை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கச்செய்யும் நிலைப்பாட்டிலேயே அனைவரும் காய்களை நகர்த்துகின்றனர். 

ஜனாதிபதி வேட்பாளராவதற்கு கல்வித்தகுதி, நிர்வாகத்திறமை, தேசப்பற்றோடு நேர்மையும் அவசியம் என்பதையும்  இவர்கள்  வெளிப்படுத்துதல் அவசியம். அப்படியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே இங்கு மக்களும் விரும்புகின்றனர். ஆனால் அது கடினமானதொன்று என்பதும் நிதர்சனமே. - சிவலிங்கம் சிவகுமாரன் -