தேன்கனிக்கோட்டை அருகே, அரச பாடசாலையில்  மதிய உணவு உட்கொண்ட 90 மாணவ - மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த திப்பசந்திரம் அரச உயர்நிலைப் பாடசாலையில் 205 மாணவ - மாணவிகள் கல்வி கற்று  வருகின்றனர். நேற்று மதியம் இவர்களுக்கு, மதிய உணவாக கலவை சாதம் வழங்கப்பட்டது. உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில், ஒருவர் பின் ஒருவராக 90க்கும் மேற்பட்டோர், வாந்தி எடுத்து, மயக்கமடைந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவர்களை தடிக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் தேன்கனிக்கோட்டை அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசூர் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் உட்கொண்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தேன்கனிக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.