வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.