(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : 

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் இது வரையில் கொழும்பிற்கு 9000 மாடி வீடுகளை வழங்கியிருக்கின்றன. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் 15 ஆயிரம் வீடுகளை வழங்கியிருக்கின்றோம். 

எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இன்னும் 5000 வீடுகளை மக்களிடம் கையளிக்கவுள்ளோம். அது மாத்திரமின்றி எதிர்வரும் மாதங்களில் சுமார் 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் 2000 வீடுகள் வழங்கப்படவுள்ளன என தெரிவித்தார்.