எம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து, ஆரோக்கியத்தை காப்பாற்றுவதில் முதன்மையான உறுப்பாக இயங்குவது மண்ணீரல். மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டால் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

பொதுவில் எம்முடைய குருதியிலுள்ள அணுக்களின் ஆயுள் நான்கு மாதம் மட்டுமே அதாவது 120 நாட்கள் மட்டுமே. அதற்கு மேற்பட்ட ரத்த அணுக்களையும், சிதைவுற்ற ரத்த அணுக்களையும் மண்ணீரல் வடிகட்டி அழித்துவிடுகிறது. 

பிறகு அதிலிருந்து புரத சத்து, இரும்பு சத்து, பிராணவாயுவை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் ஆகியவற்றை மறு சுழற்சி செய்து, மீண்டும் அதை குருதியுடன் சேர்க்கிறது. அத்துடன் உடலில் பக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் உட்புகுந்தால் அதனை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் பணியையும் மண்ணீரலே மேற்கொள்கிறது. இந்தப் பணியினை மண்ணீரல் ஆரோக்கியமான முறையில்= இயல்பான முறையில் மேற்கொள்ளாவிட்டால், பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் உட்புகுந்து, நிமோனியா காய்ச்சலை உருவாக்கி, நுரையீரல் மற்றும் மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். அதனால் மண்ணீரலின் ஆரோக்கியத்தை நாம் எப்போதும் அலட்சியப் படுத்தக்கூடாது.

எதிர்பாராவிதமாக மண்ணீரல் பாதிக்கப்பட்டால் அதன் அறிகுறியாக உடனடியாக ரத்த அழுத்தம் குறையும். ரத்த கசிவு ஏற்படும். வயிற்று வலி மற்றும் இடது தோள்பட்டை வலி ஆகியவை உண்டாகும். மலேரியா, டைபோய் போன்ற காய்ச்சலாலும், காச நோயை உருவாக்கும் கிருமிகளாலும் மற்றும் ரத்த சோகையாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். அவ்வாறு பாதிக்கப்படும் போது மண்ணீரல் வீக்கமடைந்து விடும். 

இத்தகைய தருணங்களில் அதிக களைப்பு, சைனஸ் தொல்லை, சுவாச பாதையில் அடைப்பு, காதுகளில் பிரச்சினை உள்ளிட்டவை அறிகுறியாக வெளிப்படும். இத்தகைய அறிகுறிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்தால், மண்ணீரல் வீக்கமடைந்திருக்கிறது என்பதை உணர்ந்து, உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெற்று சிகிச்சையும் முறையாக பெற வேண்டும்.

மண்ணீரலின் ஆரோக்கியத்தை காக்க, தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். கீரை, காய்கறிகள், தோடைப்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ அல்லது  நாவல்பழத்தையோ உண்பதும் பரிந்துரைக்கதக்கது. மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால், ஜீரண மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக திகழும்.