கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இரத்து !

By Daya

02 Aug, 2019 | 02:44 PM
image

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்த கோத்தபாய ராஜபக்ஷ, அதனை ரத்து செய்யுமாறு இவ் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, கோத்தாபாய பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க வழக்கு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், கோத்தாபயவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

அமெரிக்காவின், கலிபோனியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யக்கோரி கோத்தாபய அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3 ஆம் திகதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

இலங்கையின், மாத்தறை மாவட்டத்தில் கடந்த 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்து, இலங்கை குடியுரிமையை கொண்ட கோத்தபாயராஜபக்ஷவிற்கு, 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right