இந்தியாவுக்கு தப்பி சென்ற மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப், நடுக் கடலில் கைது செய்யப்பட்டார். அவரிடம், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த அகமது அதிப். மீது, மாலைத்தீவு ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அகமதுவுக்கு 15 வருட தண்டனை வழங்கப்பட்டது. 3 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், வீட்டுக் காவலில் இருந்த அகமது ஜனாதிபதி திடீரென தலைமறைவானார். அவர் எங்கே சென்றார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து அவர், இந்தியா உட்பட ஏதாவது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சமீபத்தில் 9 பேருடன் சரக்கு கப்பல் ஒன்று மாலைத்தீவுக்கு சென்றது. அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு அந்தக் கப்பல் தூத்துக்குடிக்கு திரும்பியபோது, கப்பலில் கூடுதலாக சிலர் இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உளவுத்துறையினரும் கடற்படை அதிகாரிகளும் நடுக் கடலில் வைத்து அந்த சரக்கு கப்பலை சோதனையிட்டனர். அப்போது, கப்பலில் பதுங்கி இருந்த நபர் சிக்கினார். அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப் என்பதும், மாலைத்தீவை விட்டு தப்பி வெளியேற முயற்சித்தே கப்பலில் ஏறியதாகவும் தெரியவந்தது. 

இதையடுத்து, ஜனாதிபதி அகமத் அதிப் இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.