(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபா கொடுப்பனவு பகுதியளவிலான அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும் என அந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு கட்டளையிடுவதற்கு சட்ட ரீதியிலான அதிகாரம் தொழில் அமைச்சுக்கு இல்லை. என்றாலும் இதுதொடர்பாக நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களின் இணக்கத்துடன் 2019 முதல் 2021 வரையான கூட்டு  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 700 ரூபா என்றும்  நாளொன்றுக்கு 50 ரூபா நிலையான விலை மேலதிக பங்கு என்றும் அத்துடன் ஒரு நாளைக்கு வழங்கவேண்டிய தேயிலை கிலோவுக்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ தேயிலைக்கு 40 ரூபா என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் முடியுமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.