(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நுவன் குலசேகரவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி பரிசளிப்பு வைபவத்துக்கு முன்னதாக, நுவன் குலசேகரவை பாராட்டி, அவருக்கு மரியாதை செலுத்தினர்.

துடுப்பு மட்டையை உயர்த்தி நின்றபடி கிரிக்கெட் விளையாடும் சிறார்கள்,  திமுத் கருணாரட்ண தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் இரண்டு பக்கங்களாக நின்று நுவன் குலசேகரவை கெளரவம் அளித்து வரவேற்றனர்.

நுவன் குலசேரவின் பெயரில் சமர்ப்பணம் செய்யப்பட்ட போட்டியைக் காண்பதற்கு, குலசேககரவுடன் பெற்றோர், பாரியார், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வருகை தந்தனர். 

அவரின் உற்ற நண்பரான லசித் மாலிங்கவும் வருகை தந்திருந்தார். மேலும் இப்போட்டியைக்காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் வருகை தந்தனர். 

பரிசளிப்பு விழாவின்போது, ‘குலே’ என பெயர்பொறிக்கப்பட்ட ‘கேஸ்’ பலூன்கள் பறக்கவிடப்பட்டதுடன், வாணவேடிக்கைகள், பட்டாசுகளும் கொளுத்தப்பட்டன.  இலங்கை கிரிக்கெட்டுக்கு நுவன் குலசேகர ஆற்றிய சேவையைப் பாராட்டி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால், நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குலசேகரவின் பந்துவீச்சுப் பயிற்றுநராககவும் செயற்பட்டிருந்த சம்பக்க ராமநாயக்கவுக்கு நுவன் குலசேகரவினால் நினைவுப் பரிசசொன்றும் கையளிக்கப்பட்டது.