அவுஸ்திரேலிய அணி ஆசஸ் கிண்ணம் இல்லாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பும் நிலையை உருவாக்குவதற்கு இங்கிலாந்து அணி முயற்சி செய்யும் என  அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

ஆசஸ்தொடரின் முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி அதிகஆக்ரோசத்துடன் விளையாடி எங்களை தங்கள் சொந்த மண்ணில் தோற்கடிக்க முயலும் என வோர்னர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் காயங்களை அதிகமாக்க முயல்வார்கள் நாங்கள் வெறுங்கையுடன் ஆசஸ் கிண்ணம் இல்லாமல் நாடு திரும்புவதை உறுதி செய்ய விரும்புவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஆடுகளத்தில் மாத்திரமன்றி ஆடுகளத்திற்கு வெளியேயும் எவ்வளவு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என்பது எங்களிற்கு தெரியும் என வோர்னர் தெரிவித்துள்ளார்.

பென்ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த வீரர் அவர் பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளார், அவர் மீண்டும் வந்து கடுமையாக போராடிய விதத்திற்காக பாராட்டவேண்டும்,அவர் முன்னரை விட தற்போது அதிக வேட்கையுடன் உள்ளார் எனவும் வோர்னர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அன்டர்சன் ஸ்டுவர்ட் புரோட்டையும் பாராட்டியுள்ள டேவிட் வோர்னர் இங்கிலாந்தின் ஆடுகளங்களில் அவர்களை எதிர்கொள்வது பெரும் சவால் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தமை எங்களிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் நாங்கள் அரையிறுதியில் தோற்பதை விரும்புவதில்லை எனதெரிவித்துள்ள டேவிட் வோர்னர் அரையிறுதியில் தோல்வியடைந்த அதே மைதானத்தில் நாங்கள் இன்று விளையாடுகின்றோம் அது எங்கள் மனதில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.