அமெரிக்காவில் செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை நிர்வாக  அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் புதிய தலைமை நிர்வாக  அதிகாரியை தேடுவதாக லிங்டின் வேலை வாய்ப்பு தளத்தில் கூகுள் பெயரில் போலியாக வெளியான பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்களிடம் ஒன்றிப்போய் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இப்படி மதிப்புமிக்க கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு பதில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேடுவதாக பிரபல வேலை வாய்ப்பு நிறுவனமான லிங்டின் தளத்தில் பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த பலரும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஆசை ஆசையாக உடனடியாக விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் இந்த பதிவு போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. நெதர்லாந்தை சேர்ந்த மைக்கேல் ரிஜிண்டர்ஸ் என்பவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார்.இவர் ஒன்லைனில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்பவர் ஆவார். லிங்டின் வலை பதிவில் இப்படி ஒரு பாதுகாப்பு பிழை இருப்பதை சுட்டிக்காட்வே இந்த பதிவினை தான் வெளியிட்டதாக ரஜிண்டர்ஸ் லிங்டின் தளத்திற்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து பாதுகாப்பு பிழை இருப்பதை சுட்டிக்காட்டிய ரிஜிண்டர்ஸ்க்கு நன்றி தெரிவித்த லிங்டின் தளம் அந்த போலி பதிவினை நீக்கியது.