இந்தோனேஷியாவில், பழுது நீக்குவதற்கு வந்த சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டள்ளது. 

இந்தோனேஷியா நாட்டின் ஹரிமுன் மாவட்டத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப் பட்டிருந்தது.இந்நிலையில், தொழிலாளர்கள் சிலர் நேற்று (31ம் திகதி) அந்த கப்பலில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கப்பலின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கப்பலில் இருந்த தீயணைப்பான் கருவிகள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகத்தால் தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவியது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர்.  ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

'கப்பலில் பழுது நீக்கும் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த முழு விவரம் தெரியாததால், மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெறும்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.