"கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம்."என  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இன்று தெரிவித்தார். 

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்திருந்தார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அத்துரலிய ரத்தன தேரர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை மீளப்பொறுப்பேற்று விட்டார். அதற்கு எதிராக எமது அடுத்தகட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதேவேளை,  ஹிஸ்புல்லாவும் தான் மீண்டும் ஆளுநராகப் பதவியேற்கும் வகையில் கருத்து  வெளியிட்டுள்ளார்.  

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இல்லையேல் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். 

தீவிரவாதிகளைப் பாதுகாத்தவர்கள் எவரும் பதவிகளில் இருக்கக்கூடாது. அதேவேளை, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்" - என்றார்.