(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை போராட்டம் மேற்கொண்ட வெளிவாரி பட்டதாரி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதல் உலகில் அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவலும் தெரிவித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அதனால் ஏனைய பயங்கரவாத தாக்குதலுடன் இதனை ஒப்பிடமுடியாது.

அத்துடன் அவசரகால சட்டம் இல்லாத நிலையிலே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் எதிர்காலத்திலும் பாதுகாப்பு தேவைகளுக்காக அவசரகால சட்டம் தேவை என தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்களை தடுக்கவும் உரிமை போராட்டங்களை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்தவுமே அரசாங்கம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.