(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிப்பதற்கு முடியாதளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, எனினும் அரசாங்கத்தின் நிகழ்வுகளுக்கு கோடிக்கணக்கான பணம் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் என்பது மேலதிக சட்டமாகும். அதனை பயன்படுத்திக்கொண்டு தேவையான  சட்ட திட்டங்களை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. தாக்குதல் இடம்பெற்று 3மாதம் கடந்தும் நாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை இந்த அமைச்சரவைக்கு முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்ல நேரம் நெருங்கிவருவதால் இதுதொடர்பாக சிந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது. 

அதேபோன்று கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தின் பிரகாரம்  செயற்படுத்தி இருந்தால் இந்த அவசரகால சட்டத்தை மேலும் நீடித்துக்கொள்ள தேவை ஏற்பட்டிருக்காது. அத்துடன்  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை இன்னும் அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர முடியாமல் போயுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.