அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த 6 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் பெண்ணொருவரால் இணையவழி ஊடுவல் மூலம் திருடப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் வெர்ஜீனியாவை தளமாகக் கொண்டியங்கும் 'கெபிட்டல் வன்' என்ற நிதிக்கூட்டுத்தாபனம் தெரிவித்திருக்கிறது.

தரவுகளைத் திருடிய 33 வயதுடைய பேய்ஜ் தொம்ஸன் என்ற குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

தொம்ஸன் அவரால் திருடப்பட்ட தகவல்களை கடந்த 12 தொடக்கம் 17 ஆம் திகதிகளுக்கு இடையில் குறியீட்டு முறையில் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதனைப் பார்வையிட்ட மற்றொரு சமூகவலைத்தளப் பயனாளி இதுகுறித்து 'கெபிட்டல் வன்' நிதிக்கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்திருக்கிறார். அதற்கமைவாகவே வோஷிங்டனின் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொம்ஸனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு தரவுகளைத் திருடியமைக்கான நோக்கம் இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க சட்டமா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

'கெபிட்டல் வன்' நிதிக்கூட்டுத்தாபன வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் நிதிசார் தரவுகள் திருடப்பட்ட இச்சம்பவத்தினால் அமெரிக்க டொலர்கள் 100 மில்லியன் மற்றும் 150 மில்லியனுக்கு இடையிலான நட்டம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி தரவு ஊடுருவலில் வாடிக்கையாளர்களின் கடனட்டை இலக்கங்களை குற்றவாளியால் பயன்படுத்த முடியாத போதிலும் சுமார் 140,000 சமூகப் பாதுகாப்பு இலக்கங்கள் மற்றும் 80,000 தொடர்பு வங்கி இலக்கங்களும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.