பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தென்கொட - கிரிகம்பமுனுவ பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் வேன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வேனின் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் வேனில் பொறுத்தியிருந்த ஜீ.பீ.எஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறித்த வேன் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். 

இதனை தொடர்ந்து மத்தென்கொட பொலிஸார் அங்குருவாதொட்ட பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நால்வர் மோட்டார் சைக்கிளில் வேனை துரத்திப்பிடிக்கச் சென்றுள்ளனர். 

பின்னர் வேன் வாதுவை பகுதிக்கு வந்த நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வாதுவை சோதணைச்சாவடியில்  நிறுத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் இராணுவத்தினர் இருவரையும் மோதி விட்டு நிறுத்தாமல் தொடந்து சென்றுள்ளனர்.

வேன் பின்னவத்த சந்தியை அடைந்த பொழுது வலான மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் வேனை நிறுத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது  அங்குருவாதொட பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். பின்னர் இராணுவத்தினர் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸாரின்  தீவிர தேடுதலுக்கமைய அன்றைய தினம் இரவு  சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

பலங்கொடை - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய போதாகொடகே பிரியந்த என்பவர் உயிரிழந்துள்ளதுடன். உடுகம்பொல - அஸ்கிரிவல்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஜயசிங்க ஆராச்சிலாகே சலுஜ நிகோசாந்த எனும் சந்தேக நபர் பொலிஸாரின் பாதுகாப்பில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை தெற்கு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.