வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் குறித்து  சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகள் குறித்து பக்தர்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்று சைவாபிமானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

“இம்முறை மஹோற்சவத்தின் போது சுவாமி வெளி வீதியுலா இல்லை. தேர் வெளி வீதியில் இடம்பெறாது” போன்ற பல வாந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. துரதிஸ்ட வசமாக ஒரு சில ஊடகங்களே அவற்றைப் பரப்புவதற்குக் காரணமாகியுமுள்ளன. 

நல்லைக் கந்தனின் பெருந்திருவிழா எந்தக் காலத்திலும் அதன் மாண்பும், மகிமையும் குறையும் வகையில் இடம்பெற்றதில்லை. 

கந்தப் பெருமானின் கருணையினால் எதுவித இடைஞ்சல்களுமின்றி மஹோற்சவம் இடம்பெற்று வந்துள்ளது. வழமை போன்றே இம்முறையும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெறும் என்று அறியவருகிறது.

சகல பூஜைகளும் குறிப்பிட்ட நேரங்களில் எதுவித மாற்றங்களுமின்றி நடைபெறவுள்ளன எனினும், தேசிய பாதுகாப்பு கருதி, காவல்துறையினால் சில நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதனால், அவற்றையும் சமாளித்து பூஜை மற்றும் உற்சவ நேரங்களுக்கு ஏற்றவாறு கால அவகாசத்துடன் பக்தர்கள் நேர காலத்துடன் வருகை தந்து மஹோற்சவம் சிறப்புறுவதற்கு அனைவரும் முன்வர  வேண்டும் என்று சைவாபிமானிகள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.