பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவுக்கு அர்ப்பணிக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஒரு இறுதிப் போட்டி அதாவது பிரியாவிடைப் போட்டியொன்றில் விளையாட அனுமதிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியை நுவான் குலசேகரவுக்கு அர்ப்பணிக்க தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்கு நுவான் குலசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் அழைப்பு விடுக்கவுள்ளதுடன், அன்றையதினம் இலங்கை கிரிக்கெட்டுக்கு குலசேகர ஆற்றிய சேவையை பாராட்டியும் அவரை கௌரவித்து ஒரு பிரியாவிடை நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

 

நுவான் குலசேகர இலங்கை அணிக்காக தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2003 ஆம் ஆண்டு களமிங்கியிருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி.யின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றிகொள்வதற்கு இலங்கை அணிக்காக பெரும் பங்காற்றியுள்ளார். 

1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிட்டம்புவயில் பிறந்த நுவான் குலசேகர, 184 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டிக்காள களமிறங்கிய குலசேகர, இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளார்.

184 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குலசேகர 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் 6 ஆயிரத்து 751 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளராகவும் ஐ.சி.சி.யின் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையையும் குலசேகர பெற்றுள்ளார்.