வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச்சிக்கல்கள் குறித்து இன்று இலங்கை தேசிய போக்குவரத்துச்சபை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை, சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச்சபை, சிவில் சமூகப்பிரதிநிதிகள், வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது பஸ் நிலையத்தில் பொது மக்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கான பதில்களையும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர். எனினும் இன்றைய கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதம போக்குவரத்துப் பணிப்பாளர் கலந்துகொள்ளவில்லை அத்துடன் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வாரத்தில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து பஸ் நிலையத்திலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்கள், வெளிமாவட்ட பஸ்களை பஸ் நிலையத்திற்குள் அனுமதிப்பது, பஸ் நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பஸ்களை தரித்து நிற்பது குறித்தும் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையப்பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன, பிராந்திய அலுவலகத்தின் சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர். எல். வசந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.