சந்திரயான் - 2 மூலம் வெளியிடப்பட்டதாக தற்போது இணையத்தில் உலாவரும் புகைப்படங்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 2 தற்போது வெற்றிகரமாக சந்திரனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சந்திரயான் ஏவப்பட்டு 7 நாட்கள் ஆகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

தற்போது இது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் நிலவை நோக்கி நகர்ந்து செல்லும்.

அதன்படி இதுவரை இரண்டு முறை சந்திரயான் - 2 இன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டுள்ளது. சந்திரயான் 2 செலுத்தப்பட்ட முதல்நாள் பூமியை 170 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து சுற்றத் தொடங்கியது.

இது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமியை 170 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து சுற்றி வந்த சந்திரயான் 2 முதலில் 170 இல் இருந்து 241 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது. அதன்பின் தற்போது 241 இல் இருந்து 259 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது.

இதேபோல் மேலும் 13 முறை வரும் நாட்களில் சந்திரயான்-2 சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொள்ளும். இந்த நிலையில் சந்திரயான் - 2 மூலம் வெளியிடப்பட்டதாக தற்போது இணையத்தில் நிறைய பொய்யான புகைப்படங்கள் சுற்றி வருகிறது. இணையத்தில் நிறைய படங்கள் இப்படி உலவி வருகிறது.

பூமியில் இருந்து புகை வருவது போல, எரிமலை வெடிப்பது போல, பூமியை முழுக்க முழுக்க மேகம் சூழ்ந்து இருப்பது போல நிறைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யான படங்கள் ஆகும். எந்த ஒரு படமும் கொஞ்சம் கூட உண்மைக்கு நெருக்கமானது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் சில படங்கள் இயற்கையில் நடக்கவே வாய்ப்பில்லாதா நிகழ்வுகளை கொண்டு இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் கிராபிக்ஸ், அனிமேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை நம்ப வேண்டாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 2 இலிருந்து எந்தவொரு படங்களையும் இஸ்ரோ இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.