பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் வெலிகந்தை பிரதேசத்தில் கடந்த 2019.06.18 ஆம் திகதி  இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலா 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (28) பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் பளு தூக்கும் போட்டியாளர்களுக்கான அனுசரணையாக 05 இலட்சம் ரூபா அன்பளிப்பு செய்தல் மற்றும் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக நிதி  அன்பளிப்பு மற்றும் கணனித் தொகுதிகள், இசைக் கருவிகள் ஆகியனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட தேவையுடைய சிறுவர்களான பெரகும் உயன, சதுர மாலிந்த மற்றும் மீகஸ்வெவ தியசென்புர, சதீப அநுகஸ் சுபசிங்ஹ ஆகியோரின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக அவர்களது பெற்றோரின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதியினால் நிதியுதவிசெய்யப்பட்டது.

இதேநேரம் எழுத்தாளர் எச்.எம்.குணபாலவினால் எழுத்தப்பட்ட “பியகுகே தாயதய” (ஒரு தந்தையின் மரபுரிமை) என்ற கவிதை நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் ஜனாதிபதி இன்று பிற்பகல் பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலைக்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அதன் நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.