இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் அணி 238 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் முதலாவதாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடரில் 3 : 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2:30 க்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமீம் இக்பால் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் 19 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 11 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 12 ஓட்டத்துடனும், மாமதுல்லா 6 ஓட்டத்துடனும், சபீர் ரஹ்மான் 11 ஓட்டத்துடனும், மொசாதீக் ஹூசேன் 13 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 43 ஓட்டத்துடனும், தாஜூல் இஸ்லாம் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் முஷ்தாபிகுர் ரஹூம் 110 பந்துகளில் 6 நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஒட்டம் அடங்கலாக 98 ஓட்டத்துடனும், முஷ்தபிசுர் ரஹ்மான் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் நுவான் பிரதீப், இசுறு உதான மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.