இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச  நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமை அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சுக்கு இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்றும் அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறியிருந்தமை முக்கிய விடயம்.

இந்நிலையில் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்க் கைதிகளுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருவது என்னவோ ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கைகளும் மட்டுமே. அவர்களுக்கான நிரந்தர தீர்வு குறித்து எவருமே அரசாங்கத்திடம் கதைப்பதாக இல்லை.

இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உணவு தவிர்ப்பு போராட்டமும் நோக்கப்பட்டது. புதிய மெகசின் சிறைச்சாலையில் ஒன்பது நாட்களாக உணவு தவிர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வந்த 63 வயதான   தேவதாசனின் உண்ணாவிரதத்தை அமைச்சர் மனோ கணேசன் சில உறுதிமொழிகளையளித்து முடித்து வைத்திருந்தார். இவருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் பேச்சு நடத்தவிருப்பதாக அமைச்சர் மனோ கூறுகிறார்.  எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் தமிழ்க் கைதிகள் மற்றும்   விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய பூரண தகவல்கள் இவ்விடயத்தில் தேவைப்படுகின்றன. யுத்த காலத்தில் விடுதலை புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்று சந்தேகத்தில் கைதானவர்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் எந்தளவுக்கு வளைந்து கொடுக்கும் என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆகவே   சமர்ப்பிக்க தயாராகும் அமைச்சரவை பத்திரத்தில் மிக முக்கியமான விடயங்களை உள்ளீர்க்க வேண்டிய தேவை உள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்

யுத்த காலத்தில் விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியவர்கள் , புலிகளுக்கு உணவு வழங்கியவர்கள்  என்ற சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் பலரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களாக உள்ளனர். இவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் சித்திரவதைகள் மற்றும் அச்சம் காரணமாக செய்யாத குற்றத்திற்காக அவ்வாறு வாக்குமூலம் அளித்தவர்களும் இதில் அடங்குகின்றனர்.  இவர்கள் பலருக்கு இரட்டை தண்டனைகள் விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் வசதிகள் இவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பது முக்கிய விடயம். இதை ஒரு மனிதாபிமான ரீதியிலும் மனித உரிமைகள் என்ற அம்சத்திலும் வைத்து பார்க்க வேண்டியுள்ளது.

தேவதாசனின் நிலைமையும் அப்படியானது. கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் புலிகளுடன் தொடர்புடையவர் என 2008 ஆம் ஆண்டு ஜனவரி கைது செய்யப்பட்ட தேவதாசன் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராவார். இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் 2017 ஆம் ஆண்டு இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம்.

இதனிடையே தனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரையும் அனுமதிக்காத இவர் தானே தனக்காக வாதாடி தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி நீதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.  அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினாலேயே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்தார்.

எனினும் இவரை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகள்  அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவதாசன் ஒரு உதாரணமே இவர் போன்று நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகள் செய்யாத குற்றத்திற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாடெங்கினும் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் கடந்தும் கூட இவர்களின் நிலைமை குறித்து நம்பிக்கை அளிக்கக்கூடிய எந்த நகர்வையும் தமிழ் அரசியல் தரப்பு முன்னெடுத்திருக்கவில்லை. மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சிகளிலேயே தனது அக்கறையை காட்டி வருகின்றது. இந்நிலையில் இவர்களின் விடுதலை அல்லது விசாரணைகளை துரிதபடுத்துவதற்கு அமைச்சர் மனோ சமர்ப்பிக்கவிருக்கும் அமைச்சரவை பத்திரம் எந்தளவுக்கு உதவப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நோயுற்ற நிலையிலும் சிறையில் வாடுகிறார்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் பலர் மேன் முறையீடு செய்தும் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாமல் திகதிகள் அறிவிக்கப்பட்டு நோயுற்ற நிலையில் சிறைச்சாலைகளில் காலத்தை கடத்துகின்றனர். இவ்விடயத்திலும் சகல தரப்பினரும் தமது கரிசனையை வௌிப்படுத்த வேண்டும்.

ஏனெனில் இவர்களால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு உடல் நிலை உள்ளது. மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை போனார்கள் என்ற குற்றச்சாட்டில் நீண்ட காலம் வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து பல அலைச்சல்களுக்குப்பின்னர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்களும் இருக்கின்றனர். பிந்துனுவெவ எதிர்ப்புச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

பிந்துனுவெவ சம்பவம்

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் அங்கு இருந்த 27 தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மேற்பிரிவில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் உடரட்ட மெனிக்கே ரயிலை சற்று தாமதித்து செல்லும்படி பணித்த பிரதேச மக்களை தவறாக புரிந்து கொண்ட புகையிரத நிலைய அதிபர் பொலிஸாருக்கும் விசேட அதிரடி படையினருக்கும்  தகவல் கூற அவ்விடத்தில் அவர்கள் வந்து துப்பாகிச்சூடு நடத்தியதில் வன்முறை வெடித்தது.

 இந்த சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என 12 தமிழர்கள்  கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் அனை­வரின் மீதும் கல­வ­ரத்தை தூண்டி விட்­டார்கள் பொதுச்­சொத்­துக்கு சேதம் விளை­வித்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டில் வழக்கு தொட­ரப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையில் 3 மாத­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டனர். பின்னர் பிணையில் வெளிவந்த இவர்கள் மீது 16 வருடங்கள் வழக்கு விசாரணைகள்  இடம்பெற்றன. சம்பவ இடத்தில் நின்றதைத்தவிர தமக்கும் இச்சம்பவத்துக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என இவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இக்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்  இறந்து விட 2016 ஆம் ஆண்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இருவரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னையா வடிவேல் மற்றும் சிதபரம்பிள்ளை வசீகரன் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி  தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் கண்டி பல்லேகல சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் வடிவேலு என்பவருக்கு  80 வயதாகின்றது. வசீகரன் என்பவருக்கு 60வயது. நீரிழிவு  நோய் காரணமாக இவர் தனது கால் அறுவை சிகிச்சைக்கு முகங்கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இருவரும்  தமது தண்டனைக்கு எதிராக 2016 ஆம் ஆண்டே மேன் முறையீடு செய்தும் இது வரை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலுள்ளது.

யுத்த காலத்தில் ஏதாவதொரு குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழர்களாக இருந்தால் புலி சந்தேக நபர்களாகவே பார்க்கப்பட்டனர். இதனால்    பலரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே அவர்களின் சார்பாக சட்ட உதவிகளைப்பெற்றுக்கொள்ள தாமதம் காணப்பட்டது.

யுத்தத்துக்கு பிறகு   சிறையில் வாடி வரும் தமிழ் அரசியல் கைதிகளைப்பற்றி நாட்டு மக்கள் உட்பட தமிழ் பிரதிநிதிகளும் கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையிலேயே அவர்கள் அடிக்கடி உணவு தவிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு தம்மை வெளிப்படுத்தி வருகின்றனர். விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களின் ஆயிரக்கணக்கானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று சிறைகளில் வாடுகின்றனர்.

பிந்­து­னு­வெவ புனர்வாழ்வு  சம்­ப­வத்­திற்கு கார­ண­மா­வர்கள் என கைது செய்­யப்­பட்ட 41 பேரில் அப்போது பண்­டா­ர­வளை மற்றும் தியத்­த­லாவை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள்  உட்பட  19 பேர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாவர். விசா­ர­ணை­களின் பின்னர் 2003 ஜுலை ௧ ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் இரண்டு பெரும்­பான்­மை­யினத்தவர்கள் உட்­பட நால்­வ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது ஏனையோர் விடு­தலை செய்­யப்­பட்­டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்­மு­றை­யீடு செய்­தனர். அதன் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் பின் 2005 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு அனை­வரும் விடு­தலை செய்­யப்­பட்டு விட்­டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேன் முறையீடு உடனடியாக பரிசீலிக்கப்படும் போது ஆயுள் தண்டனை கைதிகளின் முறையீடுகளில் ஏன் இந்த தாமதம் என்று கேள்வி எழுகிறது.  நீதி தாமதமாகும் போது அது மறுக்கப்படுவதற்கு சமம் என்ற விடயத்தை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பிக்கப்போகும் அமைச்சரவை பத்திரத்தின் மூலமாவது தமிழ் அரசியல் கைதிகளுக்கு விமோசனம் ஏற்படுமா?  

சி.சி.என்