திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு  மீனவர்களில் ஒரு மீனவரைக் காணவில்லையெனவும் அம்மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு காணாமல் போன மீனவர் வெருகல் - இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் (28 வயது) எனவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது நேற்றிரவு சனிக்கிழமை தனது ஏழு நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றபோது படகு இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து ஆறு  மீனவர்களும் நீந்தி கடற்கரையை வந்தடைந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன குறித்த மீனவர் திருமணம் செய்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மீனவரை பிரதேச மக்களும் கடற்படையினரும் தேடுதல்களை நடத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.