இந்தோனேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 35 ஆப்கான் குடியேறிகள் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றனர். 

“அவர்கள் குடியேறிகள். அதாவது குடியேற்ற விதிகளை மீறி இந்தோனேசியாவுக்குள் நுழைந்தவர்கள்,” என குடியேற்ற தடுப்பு மையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்திரார். 

இந்தோனேசியாவுக்குள்  பாலி(Bali) வழியாக  நுழைந்த இவர்கள் ரியா(Riau) மாகாணத்துக்கு தரைவழியாக வந்தடைந்ததாக கூறப்படுகின்றது. அங்கிருந்து மலாக்கா நீரிணையை படகு வழியாக கடந்து மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.  

இந்த நிலையில், குடியேற்ற துறையினரால் கைது செய்யப்பட்ட குடியேறிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் வேலை செய்வதற்காக அங்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக குடியேறிகள் கூறியிருக்கின்றனர் என குடியேற்ற அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இவர்கள் அகதிகள் இல்லை என்பதால் இவர்களை திருப்பி அனுப்புவதற்கான நிதி ஐ.நா.அகதிகள் ஆணையத்தால் வழங்கப்பட மாட்டாது. 

“அவர்களை நாங்கள் குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளோம். இந்தோனேசிய அரசும் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான தொகையை ஏற்றுக்கொள்ளாது,” என இந்தோனேசிய குடியேற்றத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதனால் திருப்பி அனுப்புவதற்கான தொகையை குடியேறிகளின் குடும்பங்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.