(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு இம்மாதம் 31 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அடுத்த வாரம் கல்விப் பொதுத் தராதர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. அத்தோடு ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைகளை நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே தான் 31 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. 

இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. 

உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பதாரிகளின் முழுத் தொகை 337,704 ஆகும். இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 255,529 மாணவர்களும் . தமிழ் மொழி மூலமாக 83,840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். 

இதன்பிரகாரம் மொத்தமாக 339,369 மாணவர்கள் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக தோற்றவுள்ளனர். மேலும் 2995 பரீட்சை நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளது என்றார்.