இந்திய அணித்தலைவர் விராட்கோலிக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மாவிற்கும் இடையில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அணிக்குள் நிலைமை சுமூகமாகயில்லை சிரேஸ்ட வீரர்கள் மத்தியில் மோதல் காணப்படுகின்றது  உலக கிண்ணதொடரே இதற்கு காரணம் என  டைம்ஸ்ஓவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

விராட்கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஸ்கா சர்மாவின் இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து ரோகித் சர்மா விலகிக்கொண்டுள்ளதை தொடர்ந்து இரு சிரேஸ்ட வீரர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடு என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

ரோகித் சர்மா முன்னதாக விராட்கோலியையும் தனது இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து நீக்கியிருந்தார்.

இதேவேளை தனது இன்ஸ்டகிராமில் புகைப்படமொன்றை பதிவுசெய்துள்ள அனுஸ்கா  தவறான தோற்றங்களினால் ஏற்படும் குழப்பங்களின் போது  உண்மையால் மாத்திரமே மௌனத்துடன் கைகுலுக்க முடியும் என்ற வரிகளையும் பதிவு செய்துள்ளார்.

விராட்கோலி ரோகித்சர்மாவை தனது இன்ஸ்டகிராம் நண்பர்களிலிருந்து இன்னமும் விலக்கிக்கொள்ளாத போதிலும் ரோகித்சர்மாவின் மனைவியை தனது தொடர்பிலிருந்து நீக்கியுள்ளார்.

இதேவேளை சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் இந்த தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோட் ரோய் இவை ஊடகவியலாளர்களே உருவாக்கிக்கொண்ட கதைகள் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உலககிண்ண தொடரில் நியுசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின்னர் விராட்கோலிக்கும் ரோகித்சர்மாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தன.

இந்திய அணி இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாக தொடங்கியிருந்தன.